தூத்துக்குடி பனிமய மாதா ஆலய 443ஆம் ஆண்டு திருவிழா வருகிற 26 ஆம் தேதி தொடங்க உள்ளதைத் தொடா்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா இந்த ஆண்டு 25.07.2025 முதல் 06.08.2025 வரையில் நடைபெறவுள்ளது. 25.07.2025 அன்று கொடி பவனியும், 26.07.2025 அன்று கொடியேற்ற விழாவும், 3.08.2025 அன்று நற்கருணை பவனி மற்றும் நற்கருணை ஆசீர், 04.08.2025 அன்று மாதா கோவிலை சுற்றி மாதா சப்பர பவனியும், 05.08.2025 அன்று நகர வீதிகளில் மாதா சப்பர பவனி மற்றும் 06.08.2025 அன்று கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
திருவிழா நாட்களான 26.07.2025 முதல் 05.08.2025 வரையிலான நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இவ்விழாவிற்காக தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் (Traffic Diversion), வாகன நிறுத்தங்கள் (Parking Slot) மற்றும் போக்குவரத்து ஒழுங்கு (Traffic Regulation) சம்மந்தமாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் திருவிழா ஏற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இந்த நிலையில், திருவிழா முன்னேற்பாடு பணிகளில் ஆலய நிர்வாகத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது ஆலயத்தில் மராமத்து செய்து, வண்ணங்கள் பூசப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோன்று ஆலயத்திற்கு வருபவர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, நகர வீதிகளில் சாலைகளை சீரமைத்தல், தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



