சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு விட்டு, அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட சென்ற போது தூத்துக்குடி இளைஞரை மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் ஜாமின் பெற்று சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் காலை, மாலை என இரண்டு முறை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் தனது மனைவியுடன் வந்து கையெழுத்து போட்டு விட்டு அருகே உள்ள உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற போது இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் மதன் குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை சேலம் மாநகர காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாநகரின் மையப் பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



