எட்டயபுரத்தில் சேதமடைந்த பாரதியார் பிறந்த இல்லத்தை சீரமைக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசை கண்டித்து எட்டயபுரம் பேரூர் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
முண்டாசுக் கவி என்று அன்போடு அழைக்கப்படும் மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இந்த கட்டிடம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
1973ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கினார். மேலும், சி.பா. ஆதித்தனார் தலைமையில் 12.5.1973 ல் விழா நடத்தி வரலாற்றுச் சின்னமாக அதனை அறிவித்து திறந்து வைத்தார்.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மூலம் பாரதி பிறந்த வீடு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வந்தது. தினமும் நூற்றுகணக்கானோர் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி மாலை 6 மணியளவில் பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் காப்பாளர், கதவுகளை அடைத்த சிறிது நேரத்தில் பாரதியார் இல்லத்தின் முன்பக்க மேல்மாடி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள், மரக்கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
நூற்றாண்டு பழமையான அந்த இல்லத்தின் மேல் தளத்தின் மேற்கூரையில் தேங்கியிருந்த மழைநீர் மற்றும் நீர்க்கசிவு காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், .மார்க்கண்டேயன் எம்எல்ஏ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் விரைந்து வந்து சேதமடைந்த இல்லத்தை உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வும் செய்தனர்.

பழமை மாறாமல் மறு சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 3 மாதங்கள் கடந்தும் தற்போது வரை அங்கு எந்தவித மறுசீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. சேதமடைந்த அடுத்த நாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து மேற்கூரையை முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு வீட்டின் முகப்பில் சவுக்கு கம்புகள் கட்டி, தடுப்புகள் ஏற்படுத்தி, அதில் வலைகளை பொருத்திவிட்டு சென்றனர். அதன்பிறகு அந்த வீட்டில் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது. பாரதி பிறந்த இல்லத்தை காண நாள்தோறும் வருகை தரும் மாணவ மாணவிகள், பாரதி அன்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதனையடுத்து, சேதமடைந்த பாரதியார் பிறந்த இல்லத்தை சீரமைக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசை கண்டித்து எட்டயபுரம் பேரூர் அதிமுக சார்பில் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில், முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் முன்னிலையில் இன்று ( ஜூலை 2 ) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர் என எட்டையபுரம் பேரூர் அதிமுகவினர் தெரிவித்துள்ளன.




