தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆலைக்கு ஆதரவான கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வணிகர் சங்க பேரவையைச் சார்ந்த ஜெயபாலன், மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் கணேசன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்த தங்கம், துளசி சோசியல் டிரஸ்ட் தனலட்சுமி, திரேஸ்புரம் மீனவர் சங்கத்தை சேர்ந்த சம்சுதீன், வழக்கறிஞர் விக்டர், பண்டாரம் பட்டியை சேர்ந்த மரிய செல்வகுமார் மற்றும் சாமுவேல்,தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சார்ந்த வரதராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சார்ந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் கூட்டாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்:-
பல வதந்திகளால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. இங்கே கார் கம்பெனி, ஐடி நிறுவனங்கள் வந்துள்ளது என்று சொல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியூர்களில் சென்று வேலை செய்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களை அரசோ, வேறு நிறுவனமோ சந்தித்து வேலை வாய்ப்பு வழங்கவில்லை. எங்கள் வீடுகளைச் சார்ந்த படித்த பிள்ளைகளை வேலைக்காக வெளியூர் அனுப்பவும் சூழ்நிலை உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கினால் இங்கே வேலை வாய்ப்பு கொடுக்க வாய்ப்பு உண்டு. இங்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். அங்கு வேலை வாய்ப்பு பெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்த மக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் வெறிச்சோடி கிடைக்கின்றன எனவே அரசு எங்களது கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும்.இதே நிலைமை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் நாங்கள் அடுத்த கட்டமாக பல கட்ட போராட்டங்கள் மூலமாக எங்களது கருத்துக்களை எடுத்து கூறுவோம் என்று கூறினர்.




