• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் பஞ்., தலைவியின் கணவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முன்விரோதம் காரணமாக லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அடுத்த குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள் கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். முத்து பாலகிருஷ்ணன் தற்போது அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அவர் அதிமுக கிளைக் செயலாளராக உள்ளார்.


கடந்த 20 ஆண்டுகளாக திமுகவை சேர்ந்த கருணாகரன் என்பவரது தாய் சந்திரா என்பவர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கருணாகரனின் மனைவி கௌரி கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்து வருகிறார். 


இந்நிலையில், அந்தப் பகுதியில் சுமார் 650 ஏக்கரில் கல் குவாரி ஒன்றை ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ஒரு நபருக்கு முத்து பாலகிருஷ்ணன் முடித்துக் கொடுத்துள்ளார். மேலும் முத்து பாலகிருஷ்ணன் மற்றும் கருணாகரன் இடையே தேர்தல் முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருணாகரன் ஊரில் வைத்து முத்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 


மேலும், தனது மனைவி கௌரி பஞ்சாயத்து தலைவியாக இருந்தாலும் கருணாகரனே பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை முத்துப்பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சந்திரகிரி அருகே வரும்போது எதிரே வந்த கல்குவாரி டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இந்த சம்பவம் விபத்து கிடையாது, அவரை பஞ்சாயத்து தலைவியின் கணவரான கருணாகரன் லாரி ஏற்றி கொலை செய்துவிட்டார். எனவே அவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சௌந்தர்ராஜன் என்பவரை ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்!

50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் - தூத்துக்குடி கலெக்டர் தகவல்

  • Share on