தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், கோவை வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் இணை ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த பானோத் ம்ருகேந்தர் லால்?
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பனோத் மதன்லால் - மஞ்சுளா தம்பதிகளின் மகனான பானோத் ம்ருகேந்தர் லாலுக்கு மனிஷா லட்சுமி என்ற ஒரு சகோதரி உள்ளார்.
பானோத் ம்ருகேந்தர் லால் தந்தையான பனோத் மதன்லால் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், வைரா சட்டமன்ற தொகுதியில் 2014 ஆம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதன் பின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்த அவர் 2018, 2023 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பனோத் மதன்லால் 2025 மே 27 அன்று தனது 62 வயதில் இதய நோயால் இறந்தார்.
2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் கேடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பானோத் ம்ருகேந்தர் லால், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஐஏஎஸ் கேடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரையில் பயிற்சி ஐஏஎஸ் ஆக இருந்தார்.
பின்னர் நாகை மாவட்ட உதவி கலெக்டரான பானோத் ம்ருகேந்தர் லால், தொடர்ந்து கோவை வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.




