தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய சிறப்பு முகாம் நாளை 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து அரசின் சலுகைகளைப் பெற்று பயனடையும் வகையில் சிறப்பு முகாம் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாளை 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக அமைச்சர் பி.கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சரிவர செயல்படாமல் இருந்த தொழிலாளர் நல வாரியங்கள் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதன் தொடச்சியாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் என மூன்று பிரிவுகளை சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 22.06.2025 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய வரும் விண்ணப்பதாரர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களாகவும், 60 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர்கள்கள் (சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தையல், கைவினை, கைத்தறி, காலனி, தோல் பொருட்கள் உற்பத்தி, தோல் பதனிடும் தொழிலாளர், பொற்கொல்லர், ஓவியர், மண்பாண்டத் தொழிலாளர், வீட்டு வேலை, சாலையோர கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர், வீட்டு வேலை, சாலையோர கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர், சமையல் மற்றும் உணவு விநியோக தொழிலாளர்) மற்றும் ஓட்டுநர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பம் செய்ய வரும் போது வயதுச் சான்றுக்கான பள்ளி / பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். அதுபோக குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், அலைபேசி எண் இணைக்கபட்ட ஆதார் அட்டை, நியமனதாரர் (NOMINEE) அடையாள ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். மேலும் அசல் ஆவணங்களை ஆய்வுக்காக எடுத்து வரவும். ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர் எனில் பேட்ஜ் எண் உள்ளவாறு இருக்கும் ஓட்டுநர் உரிமம் வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்தவர்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, விடுதிக் கட்டணம், திருமண மற்றும் மகப்பேறு நிதியுதவி, 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம், பணியிடத்தில் எதிர்பாராமல் மரணம் அடைபவர்களுக்கு நிதியுதவி, பணியிடத்தில் விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிதியுதவி, பெண் மற்றும் திருநங்கை ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெறலாம் என்பதால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது




