செக்காரக்குடி கிராமத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக இருக்கும் பள்ளங்களை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் உள்ள வள்ளிநாயகம் பிள்ளை தெருவில், கிராம ஊராட்சியில் இருந்து சாலை போடுகிறோம் எனக் கூறி அங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், கிழக்கு மேற்கு பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு, மத்தியில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டும் சாலை போடப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த மத்திய பகுதியில் புதிய சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளமும் பல நாட்களாக மூடப்படாமல் உள்ளது. சாலை பணிகள் நடைபெறாமலும், அதற்காக தோண்டப்பட்ட பள்ளமும் மூடப்படாமல் வெகு நாட்களாக இருப்பதால், நாளடைவில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி அவை ஒரு புறம் சாக்கடைகளாக மாறிவிட்டது.
இத்தகைய நிலையில், வீட்டிற்கு முன்பாக தோண்டப்பட்ட இந்த பள்ளத்தால் வீட்டில் இருந்து பொதுமக்கள் பள்ளத்தை தாண்டி கடந்து வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இரவு நேரங்களில் குழந்தைகள் முதியவர்கள் என பலரும் தோண்டப்பட்ட பள்ளத்தால் கால்கள் இடறி விழுந்து விபத்திற்கு உள்ளாக கூடிய அபாய சூழலும் ஏற்படுகிறது. மேலும், தேங்கியுள்ள சாக்கடை நீரால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக இருக்கும் பள்ளங்களை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



