தூத்துக்குடியில் உள்ள சி.வ.அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகர் சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி வளாகத்தை இன்று ( 12.6.25 ) காலை சுமார் 10.45 மணி அளவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கையில் புத்தகத்துடன் இருக்க வேண்டிய இடத்தில் மாணவர்கள் கையில் கற்களை சுமக்க வைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களை படிப்பதைத் தவிர வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. ஆனால், ஒரு சில அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், பள்ளி வளாகம், வகுப்பறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யப்படுத்த நிர்ப்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாநகரில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தை சுத்தப்படும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட கல்வி அலுவலர் எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இன்றைய தினம் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். இந்த நாளில் தான் தூத்துக்குடியில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




