முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ் வழங்கும் பணியில் தூத்துக்குடி இந்து முன்னணியினர் ஈடுபடுபட்டு வருகின்றனர்.
மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் "முருக பக்தர்கள் மாநாடு" ஜூன் 22ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேரை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ( ஜூன் 8, 2025 ) மதுரையில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் "முருக பக்தர்கள் மாநாடு" க்கான அழைப்பிதழ் வழங்கும் பணியில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி, பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா தலைமையிலான இந்து முன்னணி நிர்வாகிகள், தூத்துக்குடியில் உள்ள பல்வேறு அமைப்பை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக அன்பர்கள், முருக பக்தர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்து மதுரை "முருக பக்தர்கள் மாநாடு" க்கான அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.




