மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறங்களிலும், சாலையின் நடுப்பகுதியிலும் மரக்கன்றுகள், செடிகள் நட்டு பராமரிக்கவில்லை. இரவு நேரங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வண்ண விளக்குகள் வைக்கவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் மதுரை - தூத்துக்குடி இடையிலான 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக்கூறி பொதுநல வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி மதுரை எலியார்பத்தி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு, இன்று ஜூன் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் விதித்திருந்த தடையை நீக்கியது.



