தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில், பரமசிவன் பாத்திமா திரைப்படம் இலவசமாக பொதுமக்களுக்கு பார்ப்பதற்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இயக்குநர் இசக்கி கர்வண்ணன் இயக்கி இருக்கும் திரைப்படம் "பரமசிவன் பாத்திமா". இதில், விமல், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, கூல் சுரேஷ், காதல் சுகுமார், அதிரா, அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மதப் பிரிவினை வாதத்தை வைத்துக்கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பான படமாக பரமசிவன் பாத்திமா படத்தை கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
மதரீதியான பாகுபாடுகள் இன்னமும் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றும், நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த மாதிரியான வன்கொடுமைகளை பரமசிவன் பாத்திமா படத்தின் மூலம் இந்த சமூகத்திற்கு உணர்த்துகிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

சில மதங்கள் பணம் கொடுத்து மக்களை மதம் மாற்றுகிறது, அப்படி பணத்திற்காக மதம் மாறியவர் மனதளவில் மாறவில்லை. தமிழ் மண்ணின் பெருமை, இதுதான் தமிழனின் அடையாளம் என்று குல தெய்வ வழிபாட்டு உண்மை மற்றும் தேவை உள்ளிட்ட ஆழமான கருத்துக்களை படத்தின் மூலம் மக்களுக்கு காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர். காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்தும் படம் பேசுகிறது.
இந்த பரமசிவன் பாத்திமா திரைப்படம் வலது சாரி சிந்தனை கொண்டவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று ( ஜூன் 9, 2025) இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உத்தரவு படி, மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில், இந்து மக்கள் கட்சி ஏற்பாட்டில், தூத்துக்குடியில் உள்ள திரையரங்கு ஒன்றில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு தங்களுடைய செலவில் பரமசிவன் பாத்திமா திரைப்படம் இலவசமாக திரையிட்டு காட்டப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் தங்களது குடும்பத்தோடு வந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.




