• vilasalnews@gmail.com

தூத்துக்குடி டோல்கேட்டை சுற்று போட்ட லாரிகள்... விரைந்த மேயர் ஜெகன் பெரியசாமி!

  • Share on

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் சுங்கக் கட்டணம் இன்று வசூலிக்கப்பட்டதால் லாரியுடன் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடிகளில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தது.


ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி இன்று காலை முதல், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


மேலும், சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக டோல்கேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தினர், லாரி புக்கிங் ஏஜென்ட் சங்கத்தினர் உள்பட, லாரி உரிமையாளர், டிரைவர் பலர், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டை கண்டித்து, லாரிகளுடன் டோல்கேட்டை முற்றுகையிட்டு காலை முதல் மதியம் வரை பல மணி நேரமாக போராட்டம் நடத்தினர். இதனால் டோல்கேட் பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதோடு, அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மேயரும், லாரி உரிமையாளர் சங்க தலைவருமான ஜெகன் பெரியசாமி, டோல்கேட் தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர், பல மணி நேரமாக நீடித்த போராட்டம் மேயர் ஜெகன் பெரியசாமியின் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.


அதன் பின்னர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டு  லாரிகள் மற்றும் வாகனங்கள் டோல்கேட்டை கடந்து சென்றன.

  • Share on

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இடிந்து விழுந்த கட்டிடம்... தாமதிக்காத மேயர் ஜெகன் பெரியசாமி!

தூத்துக்குடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீர் மரணம் - போலீசார் விசாரணை!

  • Share on