தூத்துக்குடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரெனை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்குமார் - செய்யது சபீனா தம்பதியர். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஷாஜினி சாரா என்ற குழந்தை உள்ளது.
இந்தநிலையில் அருண்குமார் வேலைக்குச் சென்று விடவே, வீட்டில் தாய் செய்யது சபீனா மற்றும் இரண்டரை வயது குழந்தை ஆகிய இருவரும் இருந்துள்ளனர். அப்போது செய்யது சபீனா வேலை செய்து கொண்டிருக்கும் போது பக்கத்து அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் அழறல் சத்தம் கேட்டு தாய் செய்யது சபீனா ஓடிப்போய் பார்த்துள்ளார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு வந்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கு காண்போருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.



