ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு கூட்டம் ஜூன் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தற்காலிகக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு பின்வரும் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
அதன்படி, 02.06.2025 அன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் (Security Forces) மற்றும் அந்தமான் நிக்கோபார் - தமிழ் மாணாக்கர்கள்), பொது பிரிவனருக்கான கலந்தாய்வு 04.06.2025 அன்று B.Sc Zoology(TM), B.Sc Computer Science (EM), B.A History (TM), B.B.A(EM), B.Com (EM) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.
இணையவழியில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் பின்வரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் மூன்று நகல்களுடன் காலை 9.30 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வருகை புரியமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடைபெறும் கலந்தாய்வுக்கு வருகைதரும்போது பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தின் நகல், 10.11.12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான அசல் மற்றும் நகல், 4 பாஸ்போட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரி மாணவருக்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.



