தூத்துக்குடி மாநகராட்சி மாமமன்ற கூட்டத்தில், வ.உ.சி கல்வியல் கல்லூரிக்கு மாநகராட்சியால் சொத்துவரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவும், அதிமுக 51 வது வார்டு மாமன்ற உறுப்பினமான வழக்கறிஞர் மந்திர மூர்த்தி கடுமையாக எதிர்பு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 35 பாளைரோடு மெயின் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. கல்வியல் கல்லூரிக்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட 2017 – 2018 II அரையாண்டு முதல் 2024 - 2025 II வரை ரூ.5,70,624/- சொத்துவரி நிலுவையாக உள்ளது.
மாநகராட்சியால் வ.உ.சி. கல்வியல் கல்லூரிக்கு விதிக்கப்பட்ட இச்சொத்து வரியினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2021 ல் வ.உ.சி கல்லூரியின் செயலாளர் தங்களது கல்வியியல் கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி என்பதால் சொத்துவரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்க கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையானது 08.04.2024 ம் தேதிய உத்தரவின் அடிப்படையிலும், தங்களது கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி என்பதற்கான தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடிதம் TNTEU/R/2024/00365 நாள்.07.03.2024 ம் பெற்று இணைத்துள்ளார். மேலும் ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் செயலாளர் (வ.உ.சி. கல்வியியல் கல்லூரி) அவர்கள் தங்கள் கல்வியில் நிறுவனம் அரசு உதவி பெறும் கல்லூரி எனவும், தங்கள் கல்லூரி வளாகத்தில் நாங்கள் எந்தவித சுயநிதி படிப்புகளையும் நடத்தவில்லை என்றும் மேற்கூறிய உண்மைகள் எனது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் உண்மையானவை என்பதனை நான் உறுதியளிக்கிறேன் எனவும் பின்வரும் காலங்களில் மேலே நான் கூறப்பட்ட உண்மைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அதற்கு நானே முழுபொறுப்பு ஏற்கிறேன் எனவும் தெரிவித்து கையொப்பமிட்டுள்ளார்.
இந்நிலையில், வருவாய் உதவியாளர், உதவி வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆணையர் அவர்கள் ஆய்வு செய்ததில் மேற்படி வ.உ.சி கல்வியியல் கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே மேற்படி வ.உ.சி கல்வியியல் கல்லூரிக்கு இம் மாநகராட்சியால் விதிக்கப்பட்ட சொத்துவரி விதிப்பு எண்.138/035/903073 ம் அதன் மொத்த கேட்பு 2017- 2018 இரண்டாம் அரையாண்டு முதல் 2024 - 2025 இரண்டாம் அரையாண்டு வரை உள்ள தொகை ரூ.5,70,624/-ஐ கணினியிலிருந்து முழுமையாக நீக்கம் செய்ய மாமன்ற அனுமதி வேண்டப்படுகிறது. என மாமன்ற தீர்மானம் எண் 5 ல் இவை இடம் பெற்றது.
இந்த தீர்மானத்திற்கு, தூத்துக்குடி மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவும், அதிமுக 51 வது வார்டு மாமன்ற உறுப்பினமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி கடுமையாக எதிர்பு தெரிவித்தார்.
வ.உ.சி கல்லூரி வளாகத்தில் பல்வேறு வணிக கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும், தங்கள் கல்லூரி வளாகத்தில் நாங்கள் எந்தவித சுயநிதி படிப்புகளையும் நடத்தவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தவறான தகவலை கூறுகிறது. ஆகவே, அவர்களுக்கு வரிச்சலுகை மாநகராட்சி அளிக்கக்கூடாது. இதனால் மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அனுமதிக்க முடியாது என மாமன்ற தீர்மானம் எண் 5 க்கு அதிமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, "மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி கல்லூரி மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரத்தை மாநகராட்சிக்கு அளித்தால், கல்லூரிக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதற்கிடையே 34 வது மாமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திர போஸ், "இது அரசியல் காழ்புணர்ச்சியோடு வைக்கப்படும் குற்றச்சாட்டு எனவும், கல்லூரி நிர்வாகம் எந்தவொரு பொய்யான தகவலையும் அளிக்கவில்லை எனவும் கூறி" மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மாமன்ற கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



