தூத்துக்குடியில் ஒருவரை கொலை செய்வதற்காக வாளுடன் திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், கைதானவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் தலைமையிலான போலீசார் நேற்று . ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பாளை., ரோடு மையவாடி பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் சுமார் 4 அடிநீளம் உள்ள ஒரு வாள் இருந்தது.
இதையடுத்து 3பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை மகன் கிங்சன் (23), சோட்டையன் தோப்பு பாரதி நகரை சேர்ந்த சுனைராஜ் மகன் மதன்குமார் (31), அண்ணா நகர் 6 வது தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (41) என்று தெரியவந்தது.
மேலும் இவர்கள் மூவரும் தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான அண்ணா நகர் கண்ணனின் உறவினர்கள் சிலர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வந்து, கண்ணனை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதாகவும், அவரை விடுவிக்கக்கோரியும் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் ஜீப்பை முன் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



