ஸ்டெர்லைட் இன்னும் அகற்றப்படாதது ஏன் என்றும் ஆலையை அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன் என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புக்காக அதன் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரி ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 29.02.2024 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட்டின் அப்பீலை தள்ளுபடி செய்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருந்தது. அதனை அடுத்து தமிழகம் முதல்வரை சந்தித்த போராட்ட அமைப்பினர் இந்த உத்தரவை பயன்படுத்தி தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் (DISMANTLE) தாமதிக்கும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து சட்ட சிக்கலை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றோம். தமிழக முதல்வர் ஆலையை அகற்றுவதற்கான சட்டப்படி நடவடிக்கையை செய்வோம் என்றார்.
ஆனால் அது போல எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு என்ற பெயரில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் கடந்த 11-11-2024ம் தேதியில் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறிது காலம் அமைதியாக இருந்த ஆலை நிர்வாகம் இப்போது மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் CURATIVE மனுவை தாக்கல் செய்து, ஆலைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக காட்டி கொண்டு குறுக்கு வழியில் திறப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் "இன்னும் இந்த ஆலையை ஏன் தான் இங்கிருந்து அப்புறப்படுத்தாமல் இருக்கிறார்கள்" என்று தமிழக அரசை பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள்.
ஸ்டெர்லைட் நிர்வாகம் மீண்டும், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை இதுபோல அணுகுவதற்கு காரணமே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியை விட்டு அகற்றாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனம் காப்பது தான். இது வேதாந்தாவிற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஒருவேளை மீண்டும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உத்தரவிட்டால் இதற்காக போராடி உயிர்நீத்த 15 பேர் உயிரை யாராவது திருப்பிக் கொடுக்க முடியுமா? ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பிரச்சனையை பிரதானமாக கவனம் செலுத்தி ஆட்சிக்கு வந்த திமுக அரசுக்கு அது மிகுந்த பின்னடைவை ஏற்படுத்துமா? இல்லையா?
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கு சட்டப்படியான தடை தமிழக அரசுக்கு ஏதும் இருக்கவில்லை. ஆனாலும், ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து அகற்ற தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பாக தமிழ்நாடு அரசு நியமித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், பொதுமக்களில் பல்வேறு பட்ட சாட்சிகளை விசாரித்ததில் இருந்து 20-30 பேர் அடங்கிய கூட்டம், ரகசியமாக போராட்ட கூட்டத்தில் நுழைந்து நாச வலையில் ஈடுபட்டார்கள் என்றும், அவர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கூட்டு பங்களிப்புடன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதை சாதாரணதாரமாக எடுத்துக் கொண்டு விட்டு விட முடியாது, இது நிச்சயமாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டியதாகும் (ஆணையத்தின் இறுதி அறிக்கை, பகுதி - 2 பக்கம். 84) என்று ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டும் தமிழக அரசு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு ஸ்டெர்லைட்டின் பின்புலத்தை புலன் விசாரணை செய்ய வேண்டும்.
போராடிய பொதுமக்களை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை நடந்த 7- ஆம் ஆண்டிலாவது பதில் சொல்ல வேண்டும் தமிழக அரசு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




