கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்கியதில் நடந்த முறைகேடு காரணமாக, பேரூராட்சி முன்னாள் உதவி இயக்குநர், நிர்வாக அதிகாரி உட்பட மூன்று பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பேரூராட்சியில் கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் உஷா ( 54 ). தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
2017 - 18 ஆம் ஆண்டில் டெங்கு தடுப்பு பணிக்காக கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது முறையாக டெண்டர் நடைமுறைகளை கடைபிடிக்காமல், சென்னையில் உள்ள பழனிவேலு ( 48 ) என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து, அப்போதைய நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர் ( 57 ) உதவியுடன் கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்தை வாங்கியுள்ளனர்.
ரூ. 2,60,000 மதிப்பிலான இயந்திரத்தை, ரூ. 5 லட்சத்து 75 ஆயிரத்து 604 என்ற விலையில் போலி ஆவணங்கள் வைத்து வாங்கினர். இதன் மூலம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 604 நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யுமாறு சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரிடம் இருந்து பெறப்பட்ட குறிப்பாணை அடிப்படையில், உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், நிர்வாக அதிகாரி உஷா, பழனிவேல் ஆகிய மூன்று பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




