தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை (பதிவு செய்யப்பட்ட மீன்பிடி நாட்டுப்படகு மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி நாட்டுப்படகு) 06.06.2025அன்று நேரடி கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி நாட்டுப்படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி நாட்டுப்படகுகள் அனைத்தும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளை (பதிவு செய்யப்பட்ட மீன்பிடி நாட்டுப்படகு மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி நாட்டுப்படகு) 06.06.2025.அன்று நேரடி கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், நாட்டுப்படகுகள் ஆய்வு செய்யப்படும் நாளில் படகு உரிமையாளர்கள் படகு பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட மசல் எரியெண்ணெய் பாஸ்புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடுமாறும், மீன்பிடி படகுகளின் பதிவு எண்ணாது எட்டு அங்குலம் உயரம், இரண்டு அங்குலம் அகலத்திற்கு குறையாத அளவுடன், படகின் இடது மற்றும் வலது இரண்டு பக்கங்களிலும் மஞ்சள் நிற பின்பிறத்தில் கருப்பு நிறத்தில் பதிவெண்ணை தெளிவாக தெரியும்படி எழுத வேண்டும். உரிய முறையில் பதிவெண் இல்லாத நிலையில் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் சரியாக ஆய்வு செய்திட இயலாத நிகழ்விற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திட அனைத்து நாட்டுப்படகு உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், நேரடி கள ஆய்வின் போது ஆய்விற்கு உட்படுத்தாத நாட்டுப்படகுகளுக்கு அரசின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவுச் சான்றினை உரிய விசாரணைக்கு பின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் ஆய்வு நாள் அன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.




