தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் படி தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன்வளத்தினை பாதுகாத்திடும் பொருட்டும், கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதித்து தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
மீன்பிடித்தடைக்காலத்தில் மேற்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் மீன்பிடித்தொழில் மேற்கொள்வதை கண்டறிந்திட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் கடலில் தொடர் ரோந்துப்பணி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கடந்த 15.05.2025 அன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்கள், கடலோர அமலாக்கப்பிரிவு காவலர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமக் காவலர்களுடன் இரு விசைப்படகுகளில் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டதில், கிழற்கு கடற்கரை பகுதியில் தடையை மீறி மீன்பிடிப்பு நடத்திய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டு, தொழில் முடக்கம் செய்யப்பட்டது. மேலும், அதிலிருந்த 1842 கிலோ எடை கொண்ட மீன்கள் ரூ.4,16,560/-க்கு பொது ஏலமிடப்பட்டு, அத்தொகை அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், 17.05.2025 இரவு 07:00 மணிக்கு மீண்டும் மூன்று விசைப்படகுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணியாளர்கள், கடலோர அமலாக்கப்பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமக் காவலர்கள் மற்றும் மீனவப்பிரதிநிதிகளுடன் தூத்துக்குடி கடற்பரப்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
ரோந்துப்பணியின்போது 18.05.2025 அன்று அதிகாலை 02:00 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சுமார் 42 கடல்மைல் தொலைவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த IND-KL-02-MM-4022 என்ற பதிவெண் கொண்ட மீன்பிடி விசைப்படகில் 17 மீனவர்கள் மீன்பிடித்தொழில் புரிந்தது கண்டறிந்து அவர்களது படகுடன், 17 மீனவர்களையும் 18.05.2025 காலை 07:20 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் கொண்டு வரப்பட்டு, விசைப்படகு தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் தற்சமயம் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி தொழில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித்தடைக்காலங்களில் தொழில்புரியும் மேற்கு கடற்கரையைச் சேர்ந்த விசைப்படகுகளின் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இதே போல் மேற்கு கடற்கரைப்பகுதியில் மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருக்கும் போது கிழக்கு கடற்கரையினைச் சேர்ந்த மீன்பிடி படகுகள் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளா.



