தூத்துக்குடி மாவட்ட நீர் நிலைகள் பாதுகாப்பு குழு தலைவரும், சமூக ஆர்வலரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே கென்னடி தமிழக முதல்வர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணி ஆற்றின் புதிய பாலம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த அதிக கனமழையால் பாலம் உடைந்து உருக்குலைந்து இருக்கிறது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால் தரைமட்ட பழைய பாலத்தின் வழியாக பொதுமக்கள் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், பழைய பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. மேலும் புதிய பாலத்தில் போக்குவரத்து தடையால் ஏரல் குரும்பூர் சாலையில் இரு வழி வாகனங்கள் அனைத்தும் சிறிய பழைய பாலத்தின் வழியே செல்கிறது. இதனால் எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் ஆபத்தை எதிர்நோக்கி வாகனங்களை இயக்குகின்றனர்.
இதனால் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி தொடர்ந்து நிலவுகிறது. பாதசாரிகளும் பள்ளி செல்லும், குழந்தைகளும், பெண்களும், பொதுமக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே பல உயிர்சேதங்களை தடுக்கின்ற வகையில் ஏரல் தாமிரபரணி ஆற்று பழைய பாலத்தில் இருபுறங்களிலும் நிரந்தர தடுப்பு சுவர் கம்பிகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.



