• vilasalnews@gmail.com

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் : கடந்த கால உண்மையும் கணிப்புகளும் - ஓர் அலசல்!

  • Share on

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அனைத்து மாநிலத் தேர்தல்களும் நிறைவடைந்த பிறகே இந்தக் கணிப்புகளை வெளியிட வேண்டும். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 29) மாலை 6:30 மணி முதல் பல்வேறு ஊடகங்களின் கணிப்புகள் வெளியாகவுள்ளன.


இந்தச் சூழலில், கடந்த 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எந்தளவுக்கு நிஜ முடிவுகளோடு ஒத்துப்போயின என்பதைப் பார்ப்போம்.


2011 : கணிப்புகளை விஞ்சிய வெற்றி

2011 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருந்தன. 155 முதல் 170 இடங்கள் வரை அக்கூட்டணிக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது அது ஒரு மிகப்பெரிய சுனாமியாக அமைந்தது.


கணிப்பு: திமுக கூட்டணி (155-170), அதிமுக கூட்டணி (65-100).


உண்மை நிலை: அதிமுக கூட்டணி 203 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதிமுக மட்டுமே தனித்து 150 இடங்களைக் கைப்பற்றியது. திமுக கூட்டணி வெறும் 31 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பெரும் சரிவைச் சந்தித்தது.


2016: திசைமாறிய கணிப்புகள்


2016-ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றே பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. திமுக கூட்டணிக்கு 120 முதல் 140 இடங்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முடிவுகள் தலைகீழாக அமைந்தன.


கணிப்பு: திமுக கூட்டணி (120-140), அதிமுக கூட்டணி (85-120).


உண்மை நிலை: ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்தே 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. திமுக கூட்டணி 98 இடங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் கணிப்புகள் பலமுறை தவறுவதற்கும் வாய்ப்புண்டு என்பது நிரூபணமானது.


2021: ஓரளவுக்கு நெருங்கிய கணிப்புகள்


கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணிப்புகள் தெரிவித்தன. ஓரளவுக்கு அந்த கணிப்புகள் தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போயின.


கணிப்பு: திமுக கூட்டணி (160-185), அதிமுக (35-70).


உண்மை நிலை: திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக தனித்து 133 இடங்களை வென்றது. அதிமுக கூட்டணி கணிப்புகளை விட சற்று கூடுதலாக 75 இடங்களைக் கைப்பற்றியது.


கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, சில நேரங்களில் கருத்துக் கணிப்புகள் முடிவுகளுக்கு மிக நெருக்கமாகவும், சில நேரங்களில் முற்றிலும் முரணாகவும் இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது. 

  • Share on

தமிழக தேர்தல் 2026: முதல் தேர்தலிலேயே அடித்து தூக்கும் விஜய்? - எக்சிட் போல் முடிவுகள் இதோ!

தமிழக தேர்தல் 2026 : எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமான கருத்துக் கணிப்புகள் - உற்சாகத்தில் அதிமுக!

  • Share on