ஐபிஎல் சீசன் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன் குழுமத்திற்கும் இடையேயான சட்டப் போராட்டம் கிரிக்கெட் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் சமூக வலைதளங்களில் ப்ரோமோ வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சிஎஸ்கே அணி சமீபத்தில் வெளியிட்ட வீடியோக்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர், கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களின் பாடல்களையும், பின்னணி இசையையும் பயன்படுத்தியிருந்தது.
இந்தத் திரைப்படங்களை சன் குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்களின் அனுமதியின்றி காப்புரிமை பெற்ற பாடல்களைப் பயன்படுத்தியதாகக் கூறி, சன் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
சன் குழுமம் தனது வாதத்தில், எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பிய பிறகு சிஎஸ்கே அந்த வீடியோக்களை நீக்கிவிட்டது. ஆனால், வருங்காலத்தில் எங்களின் காப்புரிமையை மீறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றனர்.
சிஎஸ்கே தரப்பு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டன. இனிவரும் காலங்களில் உரிய அனுமதி பெறாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பாடல்களையோ, இசையையோ பயன்படுத்த மாட்டோம் என பதில் அளித்துள்ளனர்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இது தொடர்பாக சிஎஸ்கே தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தோனியை ரஜினிகாந்தின் 'ஹுக்கும்' போன்ற மாஸ் பாடல்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பிடிமான ஒன்று. ரசிகர்கள் எடிட் செய்யும் வீடியோக்களுக்குப் பெரிய சிக்கல் இல்லை என்றாலும், அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

