• vilasalnews@gmail.com

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: அடுத்து முடங்குகிறதா செல்போன் நெட்வொர்க்? அதிர வைக்கும் பின்னணி!

  • Share on

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு, தற்போது இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் நீடித்தால், மொபைல் நெட்வொர்க் மற்றும் டேட்டா சென்டர்கள் முடங்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.


இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் சூழலால், உலக நாடுகளுக்கு எரிபொருள் செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் பெரும்பகுதியை இறக்குமதியையே நம்பியிருப்பதால், இந்த சர்வதேச சிக்கல் உள்நாட்டு விநியோகத்தைப் பாதித்துள்ளது.


மக்களிடையே அதிருப்தி ஏற்படாமல் இருக்க, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் விளைவாக, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த எல்பிஜி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது ஹோட்டல்கள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.


செல்போன் கோபுரங்கள் தயாரிப்பில் 'கால்வனைசேஷன்' எனும் உலோகம் சூடாக்கப்படும் முறை மிக முக்கியமானது. இதற்கு எல்பிஜி எரிபொருள் அவசியம். கடந்த மார்ச் 5 முதல் பல டவர் உற்பத்தி ஆலைகளுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால், புதிய டவர்கள் அமைப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.


பல பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்கள் மற்றும் தரவு மையங்கள் தடையற்ற மின்சாரத்திற்காக எல்பிஜி மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால், இந்த ஜெனரேட்டர்கள் செயலிழந்து நெட்வொர்க் சிக்னல் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்படலாம்.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இது குறித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. எரிவாயு விநியோகம் சீராகவில்லை எனில், அன்றாடத் தேவையான செல்போன் அழைப்புகள் மற்றும் இணையப் பயன்பாடு கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

  • Share on

சமையல் சிலிண்டர் முன்பதிவு: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு!

வேடநத்தம் மாணவி படுகொலை... கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - சீமான்!

  • Share on