எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய்யின் திரைப்பயண விடைபெறலைக் கொண்டாடும் வகையில் திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது.
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை (ஜூலை 23, 2026) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்களும் தவெக நிர்வாகிகளும் இப்படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கேவின் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த பொங்கல் பண்டிகையின்போதே வெளியாக வேண்டிய இத்திரைப்படம், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம், தேர்தல் நடைமுறைகள் மற்றும் மறு சான்றிதழ் கோரல் போன்ற காரணங்களால் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாகத் தள்ளிப்போனது. சுமார் 7 மாத கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது படம் திரைக்கு வரத் தயாராகியுள்ளது.
தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த கேசரி' திரைப்படத்தின் ரீமேக் தான் 'ஜனநாயகன்' என்றாலும், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப கதையிலும் கிளைமேக்ஸ் காட்சிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இணையதளங்களில் சில காட்சிகள் கசிந்ததால், படக்குழுவினர் பல புதிய காட்சிகளை இணைத்து மறுபதிப்பு செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோரின் வரிசையில் நடிகராக இருந்து முதலமைச்சரான விஜய்யின் கடைசி படம் என்பதால், ஒட்டுமொத்தத் திரையுலகமும் அவருக்கு விடை கொடுக்கத் தயாராகி வருகிறது. 'இளைய தளபதி', 'தளபதி' என்ற பெயர்களைக் கடந்து, திரையில் 'மாண்புமிகு முதல்வர் விஜய்' என்று பெயர் தோன்றும் அந்தத் தருணத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், திருப்பூர் மாநகரில் 3 கிளைகளுடன் இயங்கி வரும் 'ஃபுட்ஸ் பை டீகே சென்ட்ரல் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ்' (Foods by DK Central Hospitality Services) என்ற உணவக நிறுவனம் ஜூலை 23 அன்று தங்கள் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"சில நட்சத்திரங்கள் நம்மை மகிழ்விக்கின்றன; சில ஜாம்பவான்கள் ஒரு தலைமுறையையே வடிவமாக்குகிறார்கள். நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்', ஒரு மறக்க முடியாத சினிமா பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
இந்தச் சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, 'ஃபுட்ஸ் பை டீகே சென்ட்ரல் ஹாஸ்பிடாலிட்டி சர்வீசஸ்' குடும்பத்தினர் அனைவரும் இணைந்து முதல் நாள் மாலைக் காட்சியைக் காணவுள்ளோம். இதற்காக ஜூலை 23, 2026 அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 183 நிமிடங்கள் கொண்ட இந்த இறுதிப் பயணம், நமது சிறுவயது நினைவுகளுக்கும் கனவுகளுக்கும் உத்வேகம் அளித்த ஒரு மாபெரும் கலைஞனின் வாழ்நாள் கொண்டாட்டமாகும்."
திரையரங்குகளில் முன்பதிவு தீவிரமடைந்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் வருகை தமிழகம் முழுவதும் ஒரு பெரிய கொண்டாட்ட நிகழ்வாக மாறியுள்ளது.