தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால், இது வெறும் படமாக இல்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், சென்சார் சான்றிதழ் வராதது கடைசி நேர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பல வாரங்களுக்கு முன்பே சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை பார்த்துவிட்டனர். படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்க உறுப்பினர்கள் பரிந்துரைத்து விட்டனர். பரிந்துரைக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகியும், அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தவெக நிர்வாகி நிர்மல் குமார் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல் குமார் தனது பதிவில் கூறியது:
"ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.



