ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா? TVK தான். தமிழக வெற்றிக் கழகமா? இல்லை டிரெய்லரில் வெளியான வேறு பெயர் என்ன என்பதை காணலாம். மேலும், இந்த டிரெய்லரில் விஜய்யின் கட்சி சின்னமான இரட்டை யானையையும் அவரது கொடியையும் காண முடிந்தது.
விஜய், இன்னும் 4 மாதங்களில் வரும் சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்த போவதாலும் இனி அரசியலில் முழு நேரமும் ஈடுபட போவதாலும் "ஜனநாயகன்"தான் கடைசி படம் என அறிவித்தார்.
எனவே ஜனநாயகன் என்ற படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் இந்த படத்தின் பெயரை பார்த்தாலே ஏதோ அரசியல் இருப்பது போல தெரிகிறது. கடைசி படம் என்பதால் விஜய் நிச்சயம் அவரது அரசியல் எதிரி குறித்தெல்லாம் பஞ்ச் வசனம் பேசியிருப்பார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் களை கட்டியுள்ளது. அதாவது ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து இதுவரை 200 கோடி ரூபாய் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படம் 9ம் தேதி ரிலீஸாகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜனவரி 10 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த "பராசக்தி" படம் திரைக்கு வருகிறது. இதனால் ஜனநாயகன் வசூல் பாதிக்குமா இல்லை எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி மறுக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் காட்சி காலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. இதனால் அங்கு சென்று முதல் காட்சியை பார்க்க தமிழக ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இவை ஒரு புறம் இருக்க இந்த படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் இன்று டிரெய்லர் வெளியானது. சுமார் 2 நிமிடங்கள் 52 வினாடிகள் கொண்ட அந்த டிரெய்லரில் கட்சி குறித்து நிறைய விஷயங்களும் அரசியல் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
டிரெய்லரில் ஒரு ரவுடி, இன்னொரு ரவுடிக்கு போன் செய்து "நான் ஒரு பெயர் அனுப்புகிறேன், அவன் உனக்கு தெரியுமான்னு பாரு" என சொல்ல அப்படி அனுப்பிய பெயரில் இன்ஸ்பெக்டர் பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷன் என குறிப்பிடப்பட்டு தளபதி வெற்றி கொண்டான் (Thalapathy Vetri Kondan) என உள்ளது.
சுருக்கமாக விஜய்யின் கட்சி பெயரான TVK என்பதை அந்த படத்தில் அவருடைய பெயர் குறிக்கிறது. அது போல் ஒரு கட்டடத்தில் தவெகவின் கொடி பறக்கிறது. மேலும் தவெகவின் சின்னமான இரட்டை யானை இந்த படத்தில் அதே ஸ்டைலில் இடம் பெற்றுள்ளது.



