• vilasalnews@gmail.com

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படுமா?பின்னணி இதுதானாம்!

  • Share on

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், தியேட்டர்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை வாரியத்துடன் ஏற்பட்ட சிக்கலால் வெளியீடு தள்ளிப்போனது.


தனி நீதிபதி வழங்கிய 'யு/ஏ' சான்றிதழ் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, வழக்கை மீண்டும் விசாரித்த நீதிமன்றம், தணிக்கை வாரியத்தின் வாதங்களைக் கருத்தில் கொண்டது. தாமதத்தைத் தவிர்க்க விரும்பிய படக்குழு, வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு மறுதணிக்கைக்கு செல்லச் சம்மதித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி. ஆஷா, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தற்போது மறுதணிக்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 20 நாட்களில் சான்றிதழ் கிடைக்கும் என்றும், பிப்ரவரி இறுதிக்குள் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தின் டிக்கெட் விலை குறித்து அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


படம் ரிலீஸாகும் போது தியேட்டர்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் திடீர் சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு உடனடியாக சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


முன்னதாக ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகவிருந்த போது, ஒரு டிக்கெட் 3500 ரூபாய் வரை விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்ததே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.


ஊழலுக்கு எதிராகப் பேசும் விஜய், தனது பட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க வேண்டாமா? எனப் பல அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபுறம் அரசியல் விமர்சனங்கள் இருக்க, மறுபுறம் தியேட்டர் உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


படம் தாமதமானதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள சூழலில், தற்போது டிக்கெட் விலை கட்டுப்பாடுகள் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கைகள் படத்தின் வசூலைப் பாதிக்குமோ என்ற அச்சம் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  • Share on

விஜய்யின் ‘ஜனநாயகன்’ சாதனையை முறியடித்தார் சிவகார்த்திகேயன்!

  • Share on