• vilasalnews@gmail.com

சாத்தான்குளத்தில் பைக் ரேஸ்: 4 பேர் கைது – 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அதிக சத்தத்துடனும் இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக நான்கு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


பொதுமக்களை அச்சுறுத்தியதாகப் புகார்


சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியில், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நான்கு பேர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகச் சென்றதுடன், அதிக ஒலி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறும், அச்சமும் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாகச் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


விசாரணைக்குப் பிறகு 4 பேர் கைது


போலீசாரின் விசாரணையில், சாத்தான்குளம் ஞானியார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (22), முத்து (19), கோகுலகண்ணன் (21), தனுஷ் சூர்யா (22) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


பைக் ரேஸ், வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை


பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், சாலைகளில் பைக் ரேஸ் நடத்துதல், பைக் வீலிங் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


மேலும், விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.


சாலைகளில் வாகனங்களைப் பொறுப்புடன் இயக்கி, பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்து ஒழுங்குக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே காவல்துறையின் அறிவுறுத்தலாக உள்ளது.

  • Share on

தூத்துக்குடி பெண் படுகொலை: 4 மணி நேரத்தில் குற்றவாளி கைது – சம்பவ இடத்தில் நெல்லை சரக டிஐஜி நேரில் ஆய்வு!

  • Share on