• vilasalnews@gmail.com

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு : குற்றவாளி சிக்கியது எப்படி?

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக, ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார்.


கடந்த மார்ச் 11-ஆம் தேதி, வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.


சம்பவம் நடந்து 9 நாட்களாகியும் துப்பு துலங்காமல் இருந்த நிலையில், குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 4 டி.எஸ்.பி-க்கள் மற்றும் 6 ஆய்வாளர்கள் உட்பட 150 காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்தில் சிசிடிவி வசதி இல்லாததால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 98 இடங்களின் கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 2,574 தொலைபேசி அழைப்பு விவரங்கள் (CDR) மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. கிராம மக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 461 குற்ற பின்னணி கொண்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது


இறுதியாக, சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் சான்றுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தடயங்களின் அடிப்படையில் ஒரு சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி, உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டுள்ளது. என்று எஸ்பி மதன்  தெரிவித்தார்.


மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம், பெயர் அல்லது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்புவது சட்டப்படி குற்றமாகும். இதுவரை சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் யாராவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், போக்சோ சட்டத்தின் (POCSO Act) பிரிவு 23-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எஸ்பி மதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தலா 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண் காவலர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என விசாரணை குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி : வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் கைதான நபர் குறித்த பகீர் பின்னணி!

  • Share on