• vilasalnews@gmail.com

தீவிரவாதிகள் பிடியில் இருந்து மீண்டு ஓட்டப்பிடாரம் வந்தடைந்தனர்!

  • Share on

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று பாதுகாப்பாகத் தாயகம் திரும்பினர். அவர்களைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொலைபேசி வாயிலாகவும்,  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் சந்தித்தும் நலம் விசாரித்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் பொன்னுதுரை மற்றும் கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மகன் புதியவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்கு (Mali) வேலைக்குச் சென்றிருந்தனர்.


கடந்த நவம்பர் 06, 2025 அன்று, இவர்கள் தங்கியிருந்த இடத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், இருவரையும் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்தனர். இந்தச் செய்தி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.


அவர்களை மீட்டுத் தரக் கோரி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி.சண்முகையா உதவியோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகத்தின் வாயிலாக அவர்களை மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனிமொழி எம்.பி மற்றும் தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியது.


மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்னுதுரை மற்றும் புதியவன், இன்று மாலை தங்களது சொந்த கிராமங்களுக்கு வந்து சேர்ந்தனர்.


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.சி.சண்முகையா, தொழிலாளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், வெளிநாடு பயணத்தில் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் தாயகம் திரும்பிய தகவலை அறிந்தவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களது உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கனிவுடன் நலம் விசாரித்தார்.


நீண்ட மாதங்களுக்குப் பிறகு தங்கள் உறவுகள் பத்திரமாகத் திரும்பியதால், அந்த கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • Share on

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்... இதோ விபரம்!

  • Share on