தமிழ்நாடு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உலமாக்கள், மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து, தற்போது ரூ.50,000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள் மற்றும் ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், மோதினார்கள் மற்றும் முஜாவர்கள், நல வாரியத்தில் பதிவு பெற்ற இதர பணியாளர்கள் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
தகுதியுள்ள பயனாளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, துறையின் முன் அனுமதியைப் பெற்ற பின்னரே வாகனத்தை வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகின்ற 13.03.2026-ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
