பசுவந்தனை அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கபட்டிருந்த பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகளை பசுவந்தனை காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07.03.2026) லக்கமாள் தேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் செட் அமைத்து அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படும் கரிமருந்துகள் மற்றும் பட்டாசு தயார் செய்யும் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து மேற்படி காவல்துறையினர் உடனே அந்த அறையில் இருந்த சுமார் 300 கிலோ கரி மருந்து , சுமார் 200 கிலோ கரித்தூள் , சுமார் 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பி ஆகியவற்றை கைப்பற்றி வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள், பட்டாசுகள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தாலோ, தயாரிப்பில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் முறையான அனுமதியுடன் செயல்படும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது என மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
