இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 5-ம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை இன்று ( 3.3.2026 ) காலமானார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னரும், இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு, ஆங்கிலேயர்களால் தூக்கிலப்பட்டு வீர மரணம் அடைந்த மாவீரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 5-ம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை ஆவார்.
இவர், பாஞ்சாலங்குறிச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், உடல்நிலை மற்றும் வயது முதிர்வின் காரணமாக இன்று பிற்பகல் சுமார் 1.45 மணி அளவில் காலமானார். அவரது உடலானது பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னாரது இறுதிச் சடங்கு நாளை ( 4.03.2026 ) மாலை 4 மணி அளவில் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை மறைவைத் தொடர்ந்து, கட்டபொம்மன் வம்சாவழியினர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஊர் பொதுமக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.




