• vilasalnews@gmail.com

அன்று வீரபாண்டிய கட்டபொம்மன் உடன் வைகோ இருந்திருந்தால் அவரின் தூக்குக்கயிற்றையே அறுத்தெறிந்திருப்பாரோ!

  • Share on

வரலாறு சில நேரங்களில் தன்னைத்தானே மறுபதிவு செய்யும் என்பார்கள். அன்று பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசின் தூக்குக்கயிற்றைத் துணிச்சலுடன் அறுத்தெறிந்த வைகோ, இன்று அதே வம்சாவளியினரின் 500 ஆண்டுகால வழிபாட்டு உரிமையைத் தட்டிப்பறிக்க முயன்ற தடையையும் தகர்த்தெறிந்துள்ளார்.


திருச்செந்தூர் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயிலில், வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்களால் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சத்திரம் கட்டப்பட்டது. மாசித் திருவிழாவின் 9-ம் நாள் மண்டகப்படியின் போது, சுவாமி இந்த 'கட்டபொம்மன் சத்திரத்தில்' எழுந்தருள்வார். அங்கு, கட்டபொம்மன் வம்சாவளியினர் வழங்கிய தங்க ஆபரணங்கள் சரிபார்க்கப்பட்டு, நிர்வாகிகளிடம் கையொப்பம் பெறும் நிகழ்வு பல நூற்றாண்டுகளாகத் தடையின்றி நடந்து வருகிறது.


ஆனால், இந்த ஆண்டு (2026) வாரிசுதாரர்களுக்கு இடையே நிலவும் சிறிய சிக்கலைக் காரணம் காட்டி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் இந்த மண்டகப்படிக்குத் திடீரென தடை விதித்தார். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனக் கூறி, பிப்ரவரி 27-ம் தேதி வரை ஆலயக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.


மண்டகப்படிக்கு இன்னும் 48 மணிநேரமே இருந்த நிலையில், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் வேறு வழியின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்திக்க சென்னை விரைந்தனர். உடல்நலக் குறைவு மற்றும் தேர்தல் பணிகளுக்கு இடையே வைகோவைச் சந்திப்பது கடினம் எனக் கருதப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை அமரவைத்து வைகோ பேசினார்.


கட்டபொம்மன் வாரிசு வீமராஜா அனுப்பிய வீடியோ பதிவைப் பார்த்த வைகோ, "கட்டபொம்மனுக்காக இதை நான் நிச்சயம் செய்வேன்" என வாக்குறுதி அளித்தார்.


"5% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது; ஆனாலும் நம்பிக்கையோடு இருங்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்" என்றார் வைகோ


மறுபுறம் அரசியல் நெருக்கடிகள். வைகோ வேலூர் நிதியளிப்பு கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், மறுபுறம் 50 லட்சம் இராஜகம்பளத்து மக்களின் உணர்வுப் போராட்டம். வைகோ எப்போதுமே 'சட்டமன்றத் தேர்தல்' கணக்குகளை விட 'சமூக நீதி'க்கே முக்கியத்துவம் கொடுப்பவர்.


சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்த வைகோ, அரசியல் எதுவும் பேசாமல், கட்டபொம்மன் மண்டகப்படி தடையால் மக்கள் அடைந்துள்ள மனவேதனையை மட்டும் விவரித்தார்.


வைகோவின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சனிக்கிழமை இரவு, இணை ஆணையாளர் தனது தடை உத்தரவைத் திரும்பப் பெற்றார். இன்று (மார்ச் 1, 2026) மாலை திருச்செந்தூர் முருகப் பெருமான் வழக்கம்போல் கட்டபொம்மன் சத்திரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.


கட்டபொம்மன் வாரிசான குருசாமி நாயக்கருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மாற்ற வைகோ 7 ஆண்டுகள் போராடினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிக் காட்டினார். அன்று தூக்குக்கயிற்றை அறுத்த அந்த அதே கரங்கள், இன்று மண்டகப்படி தடையையும் அறுத்தெறியத்துள்ளது.


மதுரை திருமங்கலம் மேம்பாலத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினும், அதற்குப் பாலமாக இருந்த வைகோவும் இன்று இராஜகம்பள சமுதாய மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.


ஒரு வேளை மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனார் காலத்தில் வைகோ இருந்திருந்தால் கட்டபொம்மனாருக்கு வந்த தூக்குக்கயிற்றையும் அறுத்தெறிந்திருப்பாரோ என்று அதிசயக்கும் வகையில், திராவிட இயக்கத்தின் போர்வாளாய் மட்டுமல்ல இராஜகம்பள சமுதாயத்திற்கும்  பாதுகாப்பு அரணாய் திகழும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இராஜகம்பள சமுதாயத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே அரசு பஸ் - பைக் மோதி விபத்து : இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

யார் இந்த திமுக நிர்வாகி? கோவில்பட்டி தொகுதியின் அரசியலில் பேசுபொருளான இளைஞர்!

  • Share on