• vilasalnews@gmail.com

தர்மயுத்தம் முதல் அறிவாலயம் வரை... எடப்பாடி சாதிச்சிட்டாரே !

  • Share on

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது ஓபிஎஸ்-ஸின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு நகர்வாகப் பார்க்கப்பட்டாலும், இந்த நிகழ்வால் நிஜமான நிம்மதி அடைந்திருப்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்கிறார்கள்.


கடந்த மூன்று ஆண்டுகளாக இபிஎஸ்-ஸிற்கு இடையூறாக இருந்தவர் ஓபிஎஸ். கட்சிப் பதவி, பொதுக்குழு தீர்மானங்கள், இரட்டை இலைச் சின்னம் எனத் தொடர்ச்சியாக நீதிமன்றப் படிகளேறி இபிஎஸ் தரப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்.


ஒரு கட்சியின் 'ஒருங்கிணைப்பாளர்' என்று உரிமை கோருபவர், மாற்றுக்கட்சியான திமுகவில் உறுப்பினராகிவிட்ட பிறகு, அதிமுக தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்குகள் தானாகவே வலுவிழந்துவிடும். இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோர இனி சட்டப்படி ஓபிஎஸ்-ஸிற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களில் இபிஎஸ்-ஸின் கை ஓங்கி நிற்கும்.


குறிப்பாக, 2022 ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த சிவில் வழக்குகள் அனைத்தும் இனி செல்லாததாகிவிடும். 'ஒருங்கிணைப்பாளர்' பதவி ரத்து மற்றும் 'பொதுச்செயலாளர்' பதவி உருவாக்கம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் இனி எடப்பாடிக்குத் தலைவலி தராது. ஒரு நபர் ஒரு கட்சியில் இருந்துகொண்டு இன்னொரு கட்சியின் சின்னத்தையோ அல்லது பதவியையோ உரிமை கோர முடியாது என்பதால், இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது.


எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்ட நினைத்த சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இப்போது வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்:


ஜெயலலிதாவின் பிறந்தநாளில் (பிப். 24) தனிக்கட்சி தொடங்கிவிட்டதால் அவர் இப்போது அதிமுகவிற்கு 'வெளியாள்'. தனது அமமுக-வை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துவிட்டதோடு, அதிமுக கூட்டணியை ஏற்பதாகவும் மறைமுகமாகச் சம்மதித்துவிட்டார்.


சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவைச் சந்தித்தபோது, திமுக கூட்டணியை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாம். ஆனால், யாரைச் சேர்த்துக் கொண்டாலும் ஓபிஎஸ்-ஸை மட்டும் உள்ளே விடமாட்டேன் என்பதில் இபிஎஸ் பிடிவாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே, வேறு வழியின்றி ஓபிஎஸ் திமுக பக்கம் ஒதுங்கிவிட்டார்.


பதவிக்காகத் தர்மயுத்தம் தொடங்கிய பன்னீர்செல்வம், இன்று தனது அரசியல் இருப்புக்காக திமுகவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால், இதன் மூலம் அதிமுக-வின் 'ஏகபோக அதிகாரம்' கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளார். எதிரியை ஒழிக்க நினைத்து பன்னீர் எடுத்த இந்த முடிவு, உண்மையில் இபிஎஸ்-ஸிற்கு கிடைத்த மாபெரும் 'கிஃப்ட்'!

  • Share on

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவின் நடவடிக்கையால் பால் உற்பத்தியாளர்களுக்கு நற்செய்தி : அனியாபரநல்லூரில் நவீன பால் பண்ணை செயல்பாட்டிற்கு வந்தது!

திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ்... தூத்துக்குடி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு!

  • Share on