• vilasalnews@gmail.com

திமுவினருக்கு சுயமரியாதை உணர்வு இல்லையா? - கடம்பூர் ராஜூவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

  • Share on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.


மேடையில் பேசிய அவர், திமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின் பதவியில் இருக்கும்போதே, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருப்பது உலகிலேயே எங்கும் நடக்காத ஒரு அவமானம். இது தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறது.


திமுக என்ன கருணாநிதி குடும்பத்தின் தனிச்சொத்தா? இது மன்னர் ஆட்சியா? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு திமுக தொண்டர்கள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு சுயமரியாதை உணர்வு இல்லையா? தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தங்களோடு இருந்தவர்கள் தற்போது திசைமாறிப் போய்விட்டதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் சாடினார்.


சாதாரண தொண்டனை உயர்த்திப் பார்ப்பது அதிமுக மட்டுமே. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பம் மட்டுமே பலன் பெறும், ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும்.


வருகின்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். தேர்தல் முடிந்தவுடன் உங்கள் இல்லம் தேடி பத்தாயிரம் ரூபாய் வந்து சேரும் என அவர் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.


இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி மற்றும் நகர செயலாளர் ஆண்டி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகன் மற்றும் பல முக்கிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மீண்டும் ஒளிருமா தீபம்? தட்டார்மடம் பகுதியில் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

முதல்வருக்கு மக்காச்சோள கதிர்களை தபாலில் அனுப்ப கோவில்பட்டி தபால் நிலையம் முன்பு குவிந்த விவசாயிகளால் பரபரப்பு!

  • Share on