• vilasalnews@gmail.com

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on

தூத்துக்குடியில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4 இளைஞர்களிடம் ரூ.26.50 லட்சம் மோசடி செய்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் அன்பு நகரைச் சேர்ந்தவர் சிவராமன் (65). இவர் கடந்த 2023-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களிடம் தனக்கு ரயில்வேயில் செல்வாக்கு இருப்பதாகக் கூறி அறிமுகமாகியுள்ளார். அவர்களுக்குத் தெற்கு இரயில்வேயில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, பல தவணைகளாக மொத்தம் ரூ.26,50,000/- பணத்தைப் பெற்றுள்ளார்.


பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவராமன், கூறியபடி வேலை வாங்கித் தராமலும், வாங்கியப் பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.


இந்த புகாரின் அடிப்படையில் மாவட்டக் குற்றப்பிரிவு-I போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிவராமனை கைது செய்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-IV-ல் நடைபெற்று வந்தது.


வழக்கை விசாரித்த நீதிபதி  பாக்கியராஜ், சிவராமன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8,000/- அபராதம் விதித்து இன்று (25.02.2026) தீர்ப்பளித்தார்.



இந்த வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு செய்து, சாட்சிகளைச் சரியாக ஆஜர்ப்படுத்தி தண்டனை பெற்றுத் தந்ததற்காக மாவட்டக் குற்றப்பிரிவு-I துணை கண்காணிப்பாளர் மயில்சாமி, ஆய்வாளர் லட்சுமி பிரபா, அப்போதைய உதவி ஆய்வாளர் அனிதா, அரசு வழக்கறிஞர் ( பொறுப்பு )  முருகப்பெருமாள், தலைமை காவலர் வைரமணி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

  • Share on

சக்கம்மாள்புரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் : மார்கண்டேயன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

  • Share on