சாகுபுரம் பகுதியில் தொழிலாளர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று சாகுபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தேவாலயம் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த இரு இளைஞர்கள், போலீசாரைக் கண்டதும் பதற்றமடைந்து அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களைச் சோதனை செய்தபோது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு கஞ்சா பொட்டலங்கள் பிடிபட்டன.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (23), காயல்பட்டினம் ரத்தினாபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் பிரபு (23) என்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இருவரும் அப்பகுதியில் வேலைக்குச் செல்லும் தினக்கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 125 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த சட்டவிரோத விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



