• vilasalnews@gmail.com

உடன்குடி அனல்மின் நிலையம்: இந்தோனேசிய நிலக்கரி வருகையோடு அடுத்த கட்டத்தை எட்டியது மின் உற்பத்திப் பணிகள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய அனல்மின் நிலையத்தின் செயல்பாடுகள் அடுத்த நிலையை எட்டியுள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக, இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20,000 டன் நிலக்கரி தற்போது மின் நிலையத்தை வந்தடைந்துள்ளது.


உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் நிலவும் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால், கடந்த 2023 பிப்ரவரி முதல் ஒரு அலகிற்கு 680 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த மின் நிலையத்திற்குத் தேவையான அதிகப்படியான எரிபொருளைக் கையாளுவதற்காக, கடற்கரை ஓரமாகவே ஒரு பிரத்யேகச் சிறு துறைமுகம் அமைக்கும் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. முதலில் இந்தோனேசியாவிலிருந்து பெரிய சரக்குக் கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சிறிய கப்பல்கள் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகத் துறைமுகத்திற்கு நிலக்கரி வெற்றிகரமாக மாற்றப்பட்டது. 


தற்போது மின் நிலையத்தில் சோதனை ஓட்டத்திற்கான நிலக்கரி கையாளும் பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, தமிழ்நாடு மின்வாரியத் துறை தலைமை அதிகாரி ராதாகிருஷ்ணன் இந்த வார இறுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். அவரது ஆய்வுக்குப் பிறகே, முழு அளவிலான நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி தொடக்கம் குறித்த அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

  • Share on

ஹோட்டலுக்குள் புகுந்து ரகளை; பெண் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

  • Share on