தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் தந்தை உயிரிழந்த வேதனையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசரேத் அடுத்த வெள்ளமடம், சுப்ரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் கனகராஜ். இவரது மகன் ஜெயராஜ் (27). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசீர் கனகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். தந்தை மீது அதிக பற்று கொண்டிருந்த ஜெயராஜ், அவர் மறைந்த பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தந்தையின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்த ஜெயராஜ், நாளடைவில் மதுப்பழக்கத்திற்கும் ஆளானதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தனது தாயிடம், அப்பா இல்லாத இந்த உலகில் என்னால் வாழ முடியவில்லை என்று உருக்கமாகக் கூறிவிட்டு ஜெயராஜ் அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அவர் மின்விசிறியில் சேலையினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த நாசரேத் காவல்துறையினர், ஜெயராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.




