ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு - சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (31). எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான இவர், 2022-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2 ஆண்டுகள் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயிற்சி ஏ.எஸ்.பி.யாக தஞ்சாவூரில் 6 மாதங்கள் பணியாற்றினார்.
பின்னர் ஹைதராபாத்தில் 2 மாதங்கள் பயிற்சியை நிறைவு செய்த மதன், தூத்துக்குடி நகர ஏஎஸ்பி-யாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சமீபத்தில் பதவி உயர்வு பெற்று, திருநெல்வேலி மாநகர மேற்கு மண்டல காவல் துணை ஆணையராக (DCP, West) நியமிக்கப்பட்டு பணியாற்று வந்த நிலையில், இன்று ( 13.2.2026 ) தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். அகில இந்திய அளவில் 195-வது இடத்தைப் பிடித்தார். ஐபிஎஸ் பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் கோப்பை, பிரதமர் பேட்டன் மற்றும் உள்துறை அமைச்சர் ரிவால்வர் ஆகியவற்றை பெற்று பலரது பாராட்டுகளை பெற்றவர் சி.மதன் என்பது குறிப்பிடத்தக்கது.

படித்து இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என இளைஞர்களை உத்வேகம் படுத்தி வரும் சி.மதன் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டு இருப்பது தூத்துக்குடி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.




