பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளை, வீரசக்கதேவி சித்திரை திருவிழாவிற்கு முன்பாக உடனடியாக சீரமைத்து தரக்கோரி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலயக்குழுவினர் கோரிக்கை மனு வழங்கினர்.
இது தொடர்பாக பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலயக்குழுவினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில், கடந்த 1974-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் இந்தப் பாஞ்சாலங்குறிச்சி நினைவுக்கோட்டை மிகக் கம்பீரமாகப் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் முன்னோடியாக விளங்கும் இந்த வரலாற்றுச் சின்னம், நம் ஓட்டப்பிடாரம் தொகுதியின் பெருமைமிகு அடையாளமாகும். தற்போது இந்தக் கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் கடந்த சில காலங்களாகப் பராமரிப்பின்றி மிகவும் மோசமடைந்துள்ளன. குறிப்பாக, வீரசக்கதேவி நுழைவு வாயிலில் தொடங்கி, நினைவுக்கோட்டையைச் சுற்றியுள்ள சாலை, அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் முன்புறப் பாதை மற்றும் சுற்றுலாத் துறை பங்களா வரை செல்லும் சாலை முழுவதுமாகச் சிதைந்து, ஜல்லிகள் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.
டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுத் தலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், வீரசக்கதேவி அம்மனைத் தரிசிக்க வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இந்தச் சாலையினால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
முக்கியமாக, வரும் சித்திரை மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் (08-05-2026 & 09-05-2026 ஆகிய தினங்களில்) மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு அரசு விழாவும், அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளன. இவ்விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் வருகை தரவுள்ளனர்.
ஆகவே, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சின்னத்தைப் பேணிக்காக்கும் வகையிலும், வரவிருக்கும் அரசு விழா மற்றும் ஆலயத் திருவிழாவைக் கருத்தில் கொண்டும், வீரசக்கதேவி நுழைவு வாயில் முதல் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையைச் சுற்றி சுற்றுலாத் துறை பங்களா வரை தரமான புதிய சாலை அமைத்திடும் பணியை, திருவிழா நாட்களுக்கு முன்பாகவே விரைந்து முடித்துத் தருமாறு தாங்கள் ஆவண செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலயக்குழு விழாக்குழு தலைவர் வலசை கண்ணன், தலைவர் வேலுச்சாமி, செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர், வரதராஜப் பெருமாள், கௌரவ தலைவர் வெயில்ராஜ், துணைச் செயலாளர்கள் சுரேஷ் குமார், பழனிச்செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் வீர சங்கர், ஸ்ரீராமகட்டபொம்முதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



