தூத்துக்குடி மாநகராட்சி, ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.02.2028) தமிழ்நாடு வனத்துறை தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் வளமும் வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி நிறைவு சான்றுகள் வழங்கும் விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் 500 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நிறைவு சான்றிதழ்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறை குறித்த பயிற்சி கையேட்டினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் வனமும் வாழ்வும் என்ற பயிற்சி முகாம் ஆசிரியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்நாடு அளவில் நடைபெற்றது. இதில் வனத்துறை பற்றியும், அரிய உயிரினங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது குறித்து விழிப்புணர்வு தொடர்பான பயிற்சி நடைபெற்றது. அந்த பயிற்சிக்கான நிறைவு சான்றிதழ் வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க கூடிய அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைய சமுதாயம் மற்றும் தலைவர்களாகிய மாணாக்கர்களுக்கான அரிய பயிற்சி இந்த பயிற்சியாகும். இந்த பயிற்சியில் வனமும், வன உயிரினங்களுக்கான பாதுகாப்பு, அதில் உள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற முறையில் தமிழ்நாடு அளவில் 20 ஆயிரம் மாணாக்கர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 25 பள்ளிகளைச் சார்ந்த ஒவ்வொரு பள்ளிகளிலிருந்து 20 மாணவர்கள் கேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இன்றையதினம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் உங்கள் அனைவருக்கும் அரிய தகவல்களை எல்லாம் சொல்லியிருப்பார்கள். நிறைய மாணாக்கர்களுக்கு இந்த தகவல்கள் கிடைக்கவில்லை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் பள்ளியில் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தான் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வன உயிரினங்கள், வனம் என்றால் என்ன? இந்திய வனப்பணி படித்திருப்பவரின் பணிகள் என்ன? என்பது பற்றியெல்லாம் தெளிவாக பயிற்சி கொடுத்திருப்பார்கள். எனவே, நீங்கள் பெற்ற தகவல்களை எல்லாம், உங்களுடன் படிக்கின்ற பிற மாணவர்களுக்கும் எடுத்து கூறுங்கள். அவர்களுக்கும் இதுகுறித்து தெரியப்படுத்துங்கள்.
எவ்வாறு காடுகளுக்கு சென்று வன உயிரினங்களை கணக்கெடுக்கிறார்கள் என்று நான் என் சிறு வயதில் நினைத்திருக்கிறேன். அதன்பின்னர் கால்நடைத்துறை அமைச்சரான பிறகுதான் எப்படி வன உயிரினங்களை இந்த துறையினர் கணக்கெடுக்கிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொண்டேன். எனவே, நிறைய தகவல்களை நாம் படித்து புரிந்து கொள்ள முடியாது. அதிகளவிலான அனுபவங்களை புத்தகங்கள், படங்கள், கதைகள் வாயிலாக உங்களுக்கு எடுத்து கூறியிருக்கிறார்கள். இந்த தகவல்களை அதிகளவிலான மாணவர்களுக்கு கொண்டுச் சேர்க்க வேண்டும்.
நமது தமிழ்நாட்டிலுள்ள இயற்கை சூழல்கள், அதிலுள்ள மரங்களின் வகைகள், அதன் பயன்கள், வன உயிரினங்கள் மற்றும் அதன் வாழ்க்கை முறைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும், இயற்கையை பாதுகாப்போம் என்ற முக்கியமான புத்தகம் ஒன்று உள்ளது. எனவே, இந்த தகவல்களை எல்லாம் நீங்கள் அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்று மாணாக்கர்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ப்ளாஸ்டிக் என்ற மக்காத பொருள் சுற்றுசூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்கிறது. உலகளவிலும் இது ஒரு சவாலான பிரச்சனையாக இருக்கிறது. வீடுகளில் உள்ள குப்பைகளை எல்லாம் ப்ளாஸ்டிக் பைகளில் கட்டி கழிவு நீர் கால்வாய்களில் போட்டுச் செல்கின்றதை நானும் பார்த்திருக்கிறேன். அது எங்கேயாவது சென்று அடைத்துக் கொள்கிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படுகிறது. சில வீடுகளில், வீட்டைச் சுத்தம் செய்து, அனைத்தையும் பெருக்கி கழிவுநீர் கால்வாய்களில் தள்ளுகின்றனர். இதெல்லாம் நமக்கு பெரிய கேடு உண்டாக்குகின்றது. இதுபோன்ற செயல்களை எல்லாம் செய்யக்கூடாது என்று வீடுகளில் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். பூமியிலும் இந்த ப்ளாஸ்டிக் கழிவுகள் மக்குவதில்லை. அதனால் மழை பொழிவதில்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே, ப்ளாஸ்டிக் பைகளை சேகரித்து கடைகளில் கொடுத்து விடலாம். எனவே, இது குறித்து பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், கழிவறை அமைக்கின்ற பொழுது, அதற்கான கழிவுநீர் தொட்டியை அடிதளத்தில் சிமெண்ட் தளத்துடன் தொட்டியாக அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், பூமி கெட்டுப் போகின்ற நிலை ஏற்படும். ஆகவே, காற்று, நீர், நிலம் உள்ளிட்ட இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாரும் எதிர்கால சமுதாயம் மற்றும் தலைவர்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, நீங்களும் கற்று விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு, அதனைப் பகுத்தாய்வு செய்கின்ற பொழுது புரிந்து கொள்வீர்கள். அதிக நேரங்களில், ஊர்களில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர கோரி கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் அந்த கழிவுநீர் கால்வாய் கடைசியாக எங்குக் கொண்டுச் செல்ல என்று கேட்டால், கண்மாயில் விட வேண்டும் என்று எளிதாக கூறுகின்றனர். கண்மாயில் விடக்கூடாது. அது நல்ல தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு உகந்த தண்ணீர் ஆகும். தொடர்ச்சியாக கழிவுநீரை கண்மாயில் விடுகின்ற பொழுது, அது மிகபெரிய நோய் தொற்றை ஏற்படுத்தும் அளவிற்கு தண்ணீர் கெட்டு போகின்ற நிலை ஏற்படும்.
எனவே, நிலம், நீர், காற்று, பூமி அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை. அதனை நமது வருங்கால் சமுதாயத்தினருக்கும் பாதுகாக்க வேண்டும். இந்த பயிற்சி நல்ல முறையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனைவரும் பயனடைந்திருக்கிறீர்கள். எனவே, இது குறித்த தகவல்களை அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கேட்டுக் கொள்கிறேன் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி, வனச்சரக அலுவலர் அஜய், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன், பள்ளி தலைமையாசிரியர், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



