கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சம்பந்தப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 30.09.2018 அன்று 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி சம்மந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து வழக்கு குறித்த சாட்சியங்களை சேகரித்தனர். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கோவில்பட்டியை சேர்ந்த டேவிட் ராஜ் 20/18 (28/26), அப்போது இளஞ்சிறாராக இருந்த ஒருவர் ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி நபர்களை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையிலடைத்தனர்.
கொலை வழக்கு 8 வருடங்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவரை கைது செய்தும் ஒருவரை கையகபடுத்தியும் சிறப்பாக பணிபுரிந்த கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.




