தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இன்று, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து, சீதனப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது :-
குழந்தைபேறு, குழந்தை வளர்ப்பு பற்றியும், கர்ப்ப காலம் எவ்வளவு முக்கியமானது? எந்த அளவிற்கு நமது மனதையும், உடலையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி எல்லாம் எடுத்துக் கூறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் நம்முடைய துறையின் சார்பாக விழா எடுக்கப்படுகிறது.
இன்று காலையில் மிக முக்கியமான நிகழ்ச்சி நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களான முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆகியவற்றிற்கு உத்தரவுகள் இன்று வழங்கப்பட்டது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை ரூ1200/- மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.1500/- ஆகியவற்றிற்கு உத்தரவுகள் வழங்குதல், அதேப்போல், கலைஞர் கனவு இல்லம் உத்தரவு, பட்டா வழங்குதல் ஆகிய நிகழ்வு நடைபெற்றது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய வளைகாப்பில் மருத்துவர்கள் அனைவருக்கும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளார். கர்ப்ப காலம் மிக முக்கியமானது. தாய்மை என்பது பெண்களுக்கு மிக மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாகும். குழந்தை பெற்றெடுக்க கூடிய தருணம் என்பது எவ்வளவு சிரமமாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஒரு சில நேரத்தில் இரண்டாவது குழந்தை பெறுகின்ற பொழுது. முதல் குழந்தைக் பிறந்த போது ஏற்பட்ட கஷ்டத்தை நாம் நினைத்து பார்ப்பதில்லை. குழந்தை பெற்றெடுப்பது என்பது மகிழ்ச்சி தரக்கூடியது.
எதிர்கால தமிழ் சந்ததியினை உருவாக்குகிறோம். எனவே நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் ஆகும். கண்டிப்பாக சாப்பிட வேண்டும். வாந்தி உள்ளிட்டவை இருந்தாலும், உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள். சாப்பாட்டினை மொத்தமாக சாப்பிடாமல், 5 அல்லது 7 முறை என்று பிரித்து, உங்களுக்கு விருப்பமான உணவினை சாப்பிடுங்கள். சாப்பிடாமல் மட்டும் இருக்காதீர்கள். ஏனென்றால் குழந்தை எடை குறைவாக பிறக்க நேரிடும். 3 கிலோவில் குழந்தையினை பெற்றெடுக்கின்ற பொழுதுதான், எளிதாக வளர்க்க முடியும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் வயிற்றிலிருக்கின்ற குழந்தையின் அரோக்கியத்தையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.
குழந்தை பிறந்த பிறகு, நமது பொறுப்பு என்பது மிக அதிகம். யாரிடமும் அதனை ஒப்படைக்க முடியாது. எனவே, உங்களுடைய பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பதில் உங்களுடைய வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கான செயல்பாடுகள் அனைத்தும் அந்தெந்த மாதத்தில் நடைபெற வேண்டும். அந்த செயல்பாடுகளில் ஏதேனும் காலம் தாமதம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதிக அளவிலான சிறு சிறு பிரச்சனைகளை, தொடக்கத்திலேயே அதாவது 2 முதல் 3 வயது வரையுள்ள போது சரிசெய்துக் கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்திருக்கிறது. குழந்தைகளின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவினை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி எல்லாவற்றிக்கும் நாம் அளிக்கின்ற உணவு தான் காரணம். சத்தான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவினை கொடுங்கள். நீங்களும் அதே உணவினை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெண்களின் ஆரோக்கியம் முக்கியம். பெண்கள் தான் குடும்பத்தின் நங்கூரம். நாம் உறுதியாக இருந்தால் தான். வேலை செய்வதிலிருந்து, குடும்பத்தை பாதுகாப்பது வரையிலான அனைத்து செயல்களையும் செய்ய முடியும். மருத்துவர்கள் எடுத்துக் கூறிய ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெற்ற அனுபவங்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். அப்பொழுது, நமது பெண்கள் சமுதாயம் மற்றும் இளம் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுத்து, ஆரோக்கியமான அறிவாற்றல் மிக்க குழந்தையாக வளர்த்தெடுப்பார்கள்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி 6 வயதுக்குள் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடும். அதற்கு தேவை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆகும். ஆகவே, உங்கள் பிள்ளைகள் அறிவாற்றல் மிக்க பிள்ளைகளாக வளரவேண்டும் என்றால் உட்டச்சத்து என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்துகள். நல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தையினை பெற்றெடுக்க நான் வேண்டி வாழ்த்துகிறேன் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் உணவுத் தட்டு, குழந்தைகளின் வளர்ச்சிப் படி நிலைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுகள், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் ஆகியவை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 250 கர்ப்பிணி பெண்களுக்கும் சீர்வரிசையாக தட்டு, மஞ்சள், குங்குமம், தேங்காய், வளையல், பூ,புடவை, 1000 நாட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஆகிய வளைகாப்பு சீர்வரிசைப் பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஐவகை சாதம் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், சென்னை அன்பு, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் காயத்ரி, மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், தூத்துக்குடி நகர்புறம் ரூபிபெர்னாண்டோ, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



