தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை டூவிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் ரொக்கப்பரிசு வழங்காத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு சார்பில் ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுகிறது.
இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை டூவிபுரம் ரேஷன் கடையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, மொத்தம் 957 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கத் தொகை ரூ. 3,000 இந்தப் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5,41,007 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கூட்டுறவு இணைபதிவாளர் காந்திமதிநாதன், துணை பதிவாளர் கலையரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




