திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசாதங்களை வீட்டிற்கே அனுப்பி வைப்பதாகக் கூறி, சமூக வலைதளங்கள் வாயிலாகப் பணம் பறிக்கும் கும்பல் குறித்துக் கோவில் நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்துள்ளது. இது போன்ற போலியான தகவல்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் திருச்செந்தூர் கோவிலின் பெயரையும், அடையாளத்தையும் அனுமதியின்றி பயன்படுத்திச் சில வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பன்னீர், விபூதி, சந்தனக் காப்பு பிரசாதம், குங்குமம் மற்றும் திருநீறு போன்ற பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனத் தவறான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பும் பக்தர்களிடம் இருந்து மோசடி கும்பல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்து வருவதாகக் கோவில் நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன.
இது குறித்துக் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கோவிலின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு முரணாகச் செயல்படும் இந்த நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபடும் சமூக ஊடகப் பக்கங்களை உடனடியாக முடக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது."
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் ஆன்லைன் சேவைகள், தரிசன முன்பதிவு மற்றும் நன்கொடைகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களுக்கும் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களில் பரவும் உண்மைத்தன்மையற்ற தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு சேவையையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




