இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோம் என பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜபெருமாள் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் இந்திய திருநாட்டின் மண்ணிற்கும், மக்களுக்கும், தன்மானத்திற்குமான போரில் உயிரை விட மானமே பெரிது என்ற கொள்கையோடும், தங்கள் தாய் மண்ணின் உரிமையை இழந்து விடக்கூடாது என்ற உணர்வோடும், இந்திய திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களோடு களத்தில் நேரடியாக நின்று யுத்தம் செய்து, தங்கள் அரண்மனை, கோட்டை கொத்தளங்கள், ஆட்சி அதிகாரம், செல்வங்கள், நிலங்கள் அனைத்தையும் இழந்ததோடு போரில் பல மாவீரர்களை களப்பலி கொடுத்து, தன் உயிரையும் நீர்த்த, இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சியின் மாமன்னர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்த நாள் விழா நாளை ( ஜனவரி 3, 2026 ) தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் தேசப்பற்றாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, இந்திய தேச விடுதலை போராட்ட மாவீரருக்கு மரியாதை செய்து வணங்கி மகிழ்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



